துரோணாச்சார்யா விருது பெற்ற முதல் இந்திய குத்துச் சண்டை பயிற்சியாளராக பரத்வாஜ் காலமானார்.
கடந்த 1985ஆம் ஆண்டு மத்திய அரசு சார்பில் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியார் விருது அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே , இந்திய குத்துச்சண்டை பயிற்சியாளரான ஓ.பி.பரத்வாஜ் மல்யுத்த பயிற்சியாளரான பாலச்சந்திர பாஸ்கர் மற்றும் தடகளப் பயிற்சியாளரான ஓ.எம். நம்பியார் ஆகியோர் மத்திய அரசின் துரோணாச்சாரியார் விருதை பெற்றிருந்தனர். இதனால் குத்துச்சண்டை விளையாட்டில் சிறந்த பயிற்சியாளருக்கான , துரோணாச்சாரியார் விருதை பெற்ற முதல் பயிற்சியாளர் என்ற பெருமையை ஓ.பி.பரத்வாஜ் பெற்றிருந்தார். இவர் தனது குடும்பத்தினருடன் டெல்லியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்திருந்த, பரத்வாஜ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஆனால் கடந்த 10 நாட்களுக்கு முன் இவருடைய மனைவி உடல் நலக்குறைவு காரணமாக இறந்த அதிர்ச்சியில் பரத்வாஜ் இருந்துள்ளதாக, அவருடைய குடும்ப நண்பர் தெரிவித்துள்ளார். இறந்த 82 வயதான பரத்வாஜ் கடந்த 1968-ம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை இந்திய குத்துச்சண்டை அணியின் பயிற்சியாளராகவும், தேர்வாளராகவும் பணியாற்றி இருந்தார். இவருடைய பயிற்சி காலத்தில் குத்துச்சண்டை வீரர்கள் ஆசிய போட்டி, காமன்வெல்த் போட்டி, போன்ற சர்வதேச போட்டிகளில் விளையாடி பதக்கங்களை வென்றுள்ளனர்.இவர் புனேயில் உள்ள ,ராணுவ பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியராக தன்னுடைய பணியை தொடங்கினர் .அத்துடன் சர்வீசஸ்அணியின் சிறந்த பயிற்சியாளராகவும் விளங்கினார்.