சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 16 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரச படையினருக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. இதில் சவுதி அரேபியாவின் தலைமையில் இயங்கும் கூட்டுப்படைகள் ஏமன் அரசாங்கத்திற்கு ஆதரவாக இயங்கி வருகிறது. இதில் ஐக்கிய அரபு அமீரகம் இருக்கிறது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் இருக்கும் விமான நிலையம் மற்றும் எண்ணெய் நிறுவனத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால், கடந்த மாதத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் மூவர் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதற்காக, தற்போது சவுதி அரேபியாவில் இருக்கும் ஜிசான் நகரத்தில், கிங் அப்துல்லா எனும் விமானநிலையத்தில் வெடி குண்டுகளை நிரப்பி ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
எனினும், ட்ரோன் விமான நிலையத்திற்குள் நுழைந்தபோதே அதனை தடுத்து அழித்துவிட்டனர். அப்போது, விபத்து ஏற்பட்டதில் 16 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதில் மூவர் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.