கண்மாயில் குளித்து கொண்டிருக்கும்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள கீழ்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் அழகர்சாமி. இவர் தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் கண்மாயில் குளித்துக் கொண்டிருக்கும் போது மூன்று குழந்தைகளும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனை கண்ட அழகர்சாமி நீரில் இறங்கி ஒரு பெண் குழந்தையை காப்பாற்றியுள்ளார். பின்பு அவரும் நீருக்குள் மூழ்கியுள்ளார். இதனைக்கண்டதும் காப்பாற்றப்பட்ட குழந்தை கூச்சலிட்டதால் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மூவரையும் மீட்டுள்ளனர்.
இதில் அழகர்சாமி உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகளை அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் இறந்த மூன்று பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து அவர்கள் விசாரணை நடத்தியபோது இறந்த குழந்தைகளில் ஒரு சிறுவன் கேரளாவில் தயாராகி வரும் ஒரு படத்தில் குழந்தை நட்சத்திரமாக 10 நாட்கள் நடித்து விட்டு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தபோது உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.