குட்டையில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அம்மன் பாளையம் பகுதியில் சுந்தரம் என்ற பெயிண்டர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீநிதி என்ற மகன் இருக்கின்றான். இவர் திருச்செங்கோடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் சில சிறுவர்களுடன் ஸ்ரீநிதி அங்குள்ள ஒரு குட்டைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது நீச்சல் தெரியாத காரணத்தால் ஸ்ரீநிதி தண்ணீரில் இறங்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால் திடீரென உற்சாகமாக குட்டையில் இறங்கி குளிக்க ஆரம்பித்தான். இதனையடுத்து நீச்சல் தெரியாததால் திடீரென ஸ்ரீநிதி தண்ணீரில் மூழ்கி விட்டான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவர்களின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஸ்ரீநிதியை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.