கஞ்சா போதையில் மாமூல் கேட்டு மார்க்கெட்டுக்குள் புகுந்த மர்மநபர் வியாபாரிகளை சரமாரி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உள்ள பகுதியில் மர்ம நபர் ஒருவர் அரிவாளுடன் நுழைந்துள்ளார். அதன்பின் அவர் அங்கிருந்த ஒரு டீக்கடையில் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் டீக்கடை உரிமையாளர் மாமூல் தர மறுத்ததால் அந்த மர்ம நபர் தான் கையில் வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினார். அதோடு அந்த கடையின் அருகே படுத்திருந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 3 பேரை சரமாரியாக வெறி பிடித்தது போல வெட்டிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் அந்த நபரை பிடிக்க முயற்சி செய்தபோது, அந்த நபர் வியாபாரிகளையும் தாக்க முயன்றுள்ளார். இதனால் பயந்து போன அனைவரும் அங்கிருந்து ஓடி விட்டனர்.
இதனை தொடர்ந்து அந்த நபரை அப்பகுதியில் உள்ள ஒட்டு மொத்த வியாபாரிகளும் சுற்றிவளைத்து விட்டனர். இச்சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரிடம் வியாபாரிகள் அந்த நபரை ஒப்படைத்து விட்டனர். அவர் வெட்டியதில் முருகன் மற்றும் முருகேசன் போன்ற நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்நிலையில் போலீசார் அந்த மர்ம நபர் கஞ்சா போதையில் மாமூல் கேட்டு சரமாரியாக வெட்டிய காட்சிகளை அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில் போதையில் மற்றவர்களை தாக்கிய அந்த நபர் வியாசர்பாடி பகுதியில் வசித்து வரும் ராஜேஷ் என்பதும், பெரியமேடு காவல் நிலையத்தில் அவர் மீது கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளதும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வியாபாரிகள் கூறும்போது மார்க்கெட்டில் ரவுடிகள் புகுந்து தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருவதாகவும், போலீசார் முறையாக இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடாமல் இருப்பதே இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.