Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

முதல் முறையா இப்படி நடந்துருக்கு… 100 கோடி மதிப்புள்ள போதை பொருள்… கைது செய்த அதிகாரிகள்..!!

சென்னை விமான நிலையத்தில் முதன் முறையாக 100 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்தி வந்த இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சென்னை மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. அந்த விமான நிலையத்திற்கு கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து வந்த விமானத்தில் பெருமளவில் போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் விமானம் தரையிறங்கியதும் 113 பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்துள்ளனர்.

அப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து ஜோகன்னஸ்பர்க்கில் வழியாக சென்னைக்கு வந்த தன்சானியா நாட்டைச்சேர்ந்த டிபோரா இளையா மற்றும் அவருடன் வந்த பெண் பயணி பிலிக்ஸ் ஒபடியா இருவரையும் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து பெங்களூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ளதாகவும் அவருக்கு உதவியாக பெண் பயணி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பெங்களூர் செல்ல நேரடியாக டிக்கெட் கிடைக்காததால் சென்னை வந்து உள்நாட்டு முனையத்திலிருந்து இருவரும் பெங்களூர் செல்ல இருந்ததாக கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்களிடமிருந்த சூட்கேஸ்களை அதிகாரிகள் சோதனை செய்த போது அதன் அடிப்பகுதியில் உள்ள ரகசிய அறைகளில் ஹெராயின் போதை பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்துள்ளனர்.

இரண்டு பேரிடம் இருந்து 100 கோடி மதிப்புள்ள 15.6 கிலோ ஹெராயின் போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அந்த நாட்டை சேர்ந்த பெண் உள்பட 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |