Categories
Uncategorized மாநில செய்திகள்

#DrugFreeTamilNadu : போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவு பாதை தான்….. குற்றங்கள் குறைந்துள்ளன….. “முற்றுப்புள்ளி வைக்க முடியல”….. ரெண்டு கையும் சேரனும்….. ஸ்டாலின் பேசியது என்ன?

போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திரும்பி வராத பகல் இல்லை திருந்தி விடாத மனமில்லை என்று பாடலை சுட்டிக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” திட்ட தொடக்க விழாவில், நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

அதன்பின் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் போதை பொருள் விழிப்புணர்வை நம்மால் ஏற்படுத்த முடியும். சட்டத்தின் வழியாக அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை நேற்றைய தினம் இதே கலைவாணர் அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. காலையில் 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரைக்கும் நடைபெற்றது. அதில் அறிவுரைகள், ஆலோசனைகள் கருத்துக்கள், என்ன நிலைமை என்பது பற்றி எல்லாம் அலசி ஆராய்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க அதற்குரிய திட்டங்களை தீட்டி இருக்கிறோம். எனவே காவல் நிலைய எல்லையில் போதை மற்றும் போதை மருந்து விற்பனையை முற்றிலுமாக தடை செய்து விட்டோம் என்று ஒவ்வொரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் உறுதி எடுத்துக் கொண்டால் நிச்சயம் போதை நடமாட முடியாது என்று நான் சுட்டிக்காட்டி பேசி இருக்கிறேன்.

மேலும் கஞ்சா விளைவிப்பதை முற்றிலுமாக தடுத்தாக வேண்டும். மலையடிவாரங்களை கண்காணிக்க வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தி வருவதை தடுத்தாக வேண்டும். எல்லை மாவட்டங்களில் சோதனை சாவடிகளை அதிகப்படுத்த வேண்டும். கடலோர மாவட்டங்களில் நிச்சயமாக கண்காணிப்பு அதிகப்படுத்த வேண்டும் காவல் துறையினர் ரோந்தினை அதிகரிக்க வேண்டும்.அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். போதை பொருள் விற்பனையாககூடிய, அதிக விற்பனையாக கூடிய இடங்களை எல்லாம் நிரந்தரமாக கண்காணிக்க வேண்டும்.

பள்ளி, கல்வி இந்த நிறுவனங்களுக்கு அருகில் விற்கப்படுவது தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தி இருக்கிறேன். அரசு இது தொடர்பான சட்டங்களை கடுமையாக்க முடிவு செய்துள்ளது. சட்டங்களை திருத்துவதற்கும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க இருக்கிறோம். போதை மருந்து விற்பவர்களுடைய சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்யப்பட இருக்கிறது இதற்காக சைபர் செல் உருவாக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு என்று தனியாக ஒரு இன்டெலிஜென்ட் செல் (நுண்ணறிவு தடுப்பு பிரிவு ) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உறுதியை மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை கண்காணிப்பாளர்களும் ஏற்றுக் கொள்ள இருக்கிறார்கள். இவை அனைத்தும் அரசாங்கத்துடைய கடமை.. இந்த நடவடிக்கைகளில் நான் சர்வாதிகாரை போல் செயல்பட்டு குற்றம் நடைபெறாமல் தடுப்பேன் என்றும், அதிகாரிகள் கூட்டத்தில் உறுதி அளித்துள்ளேன்.

இவற்றை நாங்களும், அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் பார்த்துக் கொள்வோம். சட்டம் தன் கடமையை செய்யும் சட்டம், அதன் கடமையை உறுதியாக செய்யும். அப்படி அந்த கடமையை செய்ய தவறும் அதிகாரிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த கூட்டத்தின் வாயிலாக கடுமையாக கூற விரும்புகிறேன் . இப்போது திமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது. குற்றங்கள் குறைந்துள்ளன.. குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்படுகிறார்கள்.. அவர்களுக்கு முறையாக தண்டனையும் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அதிலும் குறிப்பாக போதை மருந்து விற்பனை செய்யக்கூடிய குற்றங்களில் ஈடுபடுபவர்களை தனிப்பட்ட குற்றவாளிகளாக கருத முடியாது. இந்த சமுதாயத்தையே கெடுக்கிற குற்றவாளிகள். சமூகத்தில் தீராத பெரும் நோயை பரப்பக்கூடிய குற்றவாளிகளாக இவர்கள் இருக்கிற காரணத்தினால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு எந்தவித தயக்கமும் காட்டாது. திமுக ஆட்சி அமைந்தது முதல் 41,625 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் போதை நடமாட்டம் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க முடியலை.

அதை (போதைப்பொருள்) எப்படியாவது பெற்று விடுகிறார்கள்.. அவர்கள் கைக்கு எப்படியோ போய் சேர்ந்து விடுகிறது. இந்த சங்கிலியை உடைத்தாக வேண்டும். போதை பொருளானது ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு போய் சேர வேண்டிய அந்த சங்கிலியை நாம் உடைத்தாக வேண்டும்.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் திருடாதே என்ற திரைப்படத்தில் பாட்டு எழுதினார். ரொம்ப ஃபேமஸான பாட்டு அது… திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கிறது. அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்கிறது. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று எழுதினார் பட்டுக்கோட்டையார்..

எந்த குற்றமாக இருந்தாலும் அதை சட்டத்தில் சட்டத்தின் உடைய பங்கு பாதி தான். குற்றவாளிகள் மனமாற்றம் ஆனது பாதியளவு இருக்கணும்.. அதிலும் போதை பொருள் பயன்பாடு என்பது அதனை பயன்படுத்துவர்களின் விருப்பமாக, இன்னும் சொன்னால் அவர்கள் அதில் அதிகப்படியாக அடிமையாகி விடுகிறார்கள். மீள முடியாத அளவுக்கு சிலர் போய் விடுகிறார்கள்.. இவர்களை திருத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.. சாதாரண நோயாக இருந்தால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற அவருடைய பெற்றோர், உறவினர்கள் போதும்.. ஆனால் போதை போன்ற சமூக நோயாக இருக்குமானால் அதில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற ஒட்டுமொத்த சமூகமே முயற்சி எடுத்தாக வேண்டும்”. என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போதை என்பது சமூகத்தையே அழித்து விடும்.. பெரும்பாலும் தனக்கு வந்த பிரச்சனையில் இருந்து மீள்வதற்காக போதையை பலர் நாடுகின்றனர்.. படிப்பு சரியா வரல, மனக் கவலை ஏற்படுகிறது.. வாழ பிடிக்கவில்லை என எத்தனையோ காரணங்களை சொல்லிக்கிட்டு இருக்காங்க.. இந்த காரணங்களுக்கு எந்த பொருளும் கிடையாது, போதைக்கு காரணங்களை தேடாதீர்கள்.. பிரச்சனைகளுக்கு தீர்வை தேடுங்கள்.. அதனுடைய முடிவில் வெற்றி காத்திருக்கும்.. வெற்றியை சுவைக்க தொடங்கி விட்டால் அதுவே உங்களை பல உயரங்களை கொண்டு செல்லும்.

மாறாக போதை பொருட்களை பயன்படுத்துவதால் பிரச்சனைகள் அதிகமாகுமே தவிர குறையாது.. ஒரு பிரச்சனையில் இருந்து விடுபட கூடியவர்கள் இன்னொரு பிரச்சனையில் யாரும் மாட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.. பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறீர்கள்.. போதையால் மனப்பிரச்சனை ஏற்படும். சட்டப் பிரச்சனை ஏற்படும். அது கடுமையா இருக்கும், போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவு பாதை தான்..

போதை மருந்து பற்றி பட்டியலிடுங்கள் என்று மருத்துவரிடம் கேட்டபோது, அவர்கள் சொன்னார்கள் பீதியே ஏற்பட்டுவிட்டது. முதலில் மூளையின் செயல்பாடு குறைகிறது, மந்தம் ஏற்படுகிறது. செல்ஃப் கண்ட்ரோல் குறைகிறது, தனியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே ஏற்படும், இயல்பான பழக்கவழக்கம் மாறும், மனநிலை பாதிக்கப்படுகிறது, கோபம் வருகிறது, இதயம் பாதிக்கப்படுகிறது, நுரையீரல் பாதிக்கப்படுகிறது, கேன்சர் வருது, பக்கவாதம் ஏற்பட்டு மொத்தமாக படுக்க வைத்துள்ளது இதுதான் போதையின் பயணம்..

இந்த போதையை விலை கொடுத்து வாங்கலாமா? இந்த அழிவு பாதையில் செல்லலாமா? இத்தகைய மோசமான வாழ்க்கை தேவையா? போதையின் இந்த கொடுமையை  நாம் உணர்ந்தாக வேண்டும். விலைமதிப்பில்லாத மனித உயிர்களை இப்படி ஒட்டுமொத்தமா சிதைத்து கொள்ளக் கூடாது.. கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன், மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.. போதை என்பது அதனை பயன்படுத்தும் தனி மனிதனுடைய பிரச்சனை அல்ல, சமூகப் பிரச்சனை.. போதை என்பது முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம், சமூகத்தில் குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதுதான்..

ஒருவர் போதையை பயன்படுத்தி விழுந்து கிடக்கின்ற காரணத்தினால் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்கக் கூடாது போதை தான் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு தூண்டுகோலாக இருக்கிறது. எத்தகைய குற்றம் செய்தவர்கள் பெரும்பாலானவர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவார்களாக இருக்கக்கூடியவர்கள் அல்லது போதை உட்கொண்ட நிலையில் இந்த குற்றத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்.

போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என்று இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் சேர்ந்துதான் தடுத்தாக வேண்டும். இது மக்கள் இயக்கமாக செயல்பட வேண்டும்.. போதை மருந்தை பயன்படுத்துபவர்கள் இதிலிருந்து விடுபட வேண்டும்.. விடுபட்டவர் போதை பயன்பாட்டுக்கு எதிராக பரப்புரை செய்தாக வேண்டும்..
பெற்றோர் தங்கள் பிள்ளைகளை போதை பொருள் பயன்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும்.. இதே கடமை பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கிறது.. இதை பணி கல்லூரி நிர்வாகத்திற்கு இருக்கிறது, வியாபாரிகள், கடைக்காரர்கள் இதை விற்க மாட்டோம் என உறுதி ஏற்க வேண்டும்.

போதையின் தீமையை மருத்துவர்கள், குறிப்பாக மனநல மருத்துவர்கள் பரப்புரை செய்ய வேண்டும். போதையில் விழுந்தவர்களை மீட்பதற்கான பணியை சமூக அமைப்புக்கள், அரசு சாரா நிறுவன தொண்டு நிறுவனங்கள் இதை செய்தாக வேண்டும். இதனை நாம் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கு மிக மிக முக்கியமானது. பாதி நேரம் பெற்றோர்கள் பாதி நேரம் ஆசிரியர்களுடன் தான் படிக்கும் காலத்தில் பிள்ளைகள் இருக்கிறார்கள். எனவே அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கிறது.. தங்கள் பிள்ளைகளோடு பெற்றோர்கள் அதிக நேரத்தை செலவு செய்யணும்.. மனம் விட்டு பேசுங்க.. பள்ளியில் என்ன நடந்திருக்கு என்று கேளுங்கள், என்ன சொல்லி கொடுத்தாங்கன்னு கேளுங்க.. இன்றைய நாள் எப்படி போச்சு.. என்ன தேவைப்படுகிறது என்று நாள் ஒன்றுக்கு பெற்றோர் பிள்ளைகளிடம் விசாரிக்க வேண்டும்.

சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுங்க.. வெளியில் எங்கேயாவது போனீங்க என்றால் சேர்ந்து போங்க.. உறவினர்களை  அணுகுங்கள். குடும்ப விழாக்களில் பங்கெடுத்து, உங்கள் பிள்ளைகளோடு நேரத்தை செலவு செய்யுங்கள். குழந்தைகளோடு இயல்பாக பழகுங்கள், நண்பர்களாக அணுகுங்கள்.. அன்போடு அவரிடம் பேசுங்க.. எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்.. அதே மாதிரி தான் கண்டிப்பு..
கண்டிப்பு தேவைதான்.. ஆனா அதே கண்டிப்பு ஆபத்தாக போய் முடிகிறது. அதே மாதிரி தான் கவனிப்பே இல்லாத வாழ்க்கை ஆபத்துதான்.. இதே கடமை ஆசிரியர்களுக்கும் உண்டு. நீங்கள் கண்டிப்பாக நிற்க வேண்டும்.. அதே நேரத்தில் பணிவுடன் இருக்க வேண்டும்.. மாணவர், மாணவியரின் படிப்பை தாண்டி நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும்.

முக்கால் மணி நேரம் பாட மேடையில் 5 நிமிடத்தில் பொதுவான விஷயங்களை அவர்களிடத்தில் பேசுங்கள். வகுப்பில் யாராவது சோர்வாக காணப்பட்டால் யாரிடத்திலும் ஒட்டாமல் இருந்தால் அந்த மாணவனை கூப்பிட்டு மாணவியை கூப்பிட்டு தனியாக அழைத்து பேசுங்கள்.. அவங்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுங்க.. அவங்களும் உங்க பிள்ளைகள்தான்.. அவர்கள் நல்ல விதமாக வளர்ந்தாலும் பெருமை உங்களுக்கு தான்.. கெட்டவர்களாக ஆனாலும் தாழ்ச்சி உங்களுக்கு தான்.. ஆக பெற்றோர்கள் பாதி ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் பாதி பெற்றோர்களாகவும் இருந்து மாணவர் சமுதாயத்தை வளர்த்தால் போதை போன்ற தவறான பழக்கங்கள் யாரும் ஈடுபட மாட்டார்கள்.

சட்டத்தின் காவலர்களாக போதை பொருட்களை தடுக்க மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை கண்காணிப்பாளர்களும் இருப்பதைப் போல விழிப்புணர்வின் காரணமாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த ரெண்டு கைகளும் சேர்ந்தால்தான் இந்த போதையின் பாதையை நாம் தடுக்க முடியும். மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான்.. போதையோடு கை கொடுக்காதீர்கள் வாழ்க்கையே கைநழுவி போய்விடும்.. மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான் போதை பாதை அழிவு பாதை அதில் யாரும் செல்லாதீர்கள். மற்றவர்களையும் செல்ல விடாதீர்கள். மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான் போதைக்கு தெரிந்தது அழிவு பாதை மட்டும்தான்.. அனைவரும் பாதையை தடுக்கும் காவலர்களாக மாற வேண்டும். மேற்கத்திய நாடுகளில் போதை மருந்து பழக்கங்கள் குறைந்து, ஆசிய நாடுகளில் அதிகமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் நமக்கு சொல்லுது.

மேற்கத்திய நாடுகளில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு அதிகமானதும் இதற்கு காரணம் அத்தகைய விழிப்புணர்வு. பரப்புரையில் மக்கள் பிரதிநிதிகளாக நீங்கள் அனைவரும் ஈடுபட வேண்டும். இதுவும் மக்களை காக்கக்கூடிய பணிதான் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. போதை மருந்துகள் நம் மாநிலத்திற்குள் நுழைவதை தடுத்தாக வேண்டும், பரவுவதை தடுத்தாக வேண்டும், விற்பனையாவது தடுக்க வேண்டும், பயன்படுத்துவதை தடுக்க வேண்டும், பயன்படுத்துபவர்களை அதிலிருந்து மீட்டாக வேண்டும்.. இதுவரை பயன்படுத்தாத இன்னொருவர் கைக்கு அது போய் சேராமல் தடுக்க வேண்டும்.

போதை பாதையை அடைப்பதும் எளிதுதான். போதையில் இருப்பவர்களை மீட்பதும் எளிதுதான். அவர்களுக்கு சொல்ல வேண்டிய முறைகளை சொல்லியாக வேண்டும். இறுதியாக என் நினைவுக்கு வருவது காவிய கவிஞர் வாலியின் பாடல் தான். வளர்ந்து வராத பிறையில்லை, வடிந்து விடாத நுரையில்லை. திரும்பி வராத பகல் இல்லை திருந்தி விடாத மனமில்லை, அதைச் சொல்லி தான் நான் முடிக்கிறேன் நன்றி வணக்கம்! என்று முடித்துள்ளார்.

Categories

Tech |