5 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை 21 மூட்டைகளில் பதுக்கி வைத்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் தனிப்பிரிவு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் சுரேஷ், பாலமுருகன், ராஜசேகர் போன்ற போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் விருதாச்சலம் பங்களா தெரு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் தினேஷ்குமார் என்பவரை பிடித்து விசாரித்துள்ளனர்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவருக்கு சொந்தமான ஒரு பிளாஸ்டிக் கடை குடோனுக்கு சென்று சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை 21 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக தினேஷ்குமாரை தனிப்பிரிவு போலீசார் கைது செய்து விருதாச்சலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.