விருதுநக அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் முத்துராமலிங்கபுரத்தை அடுத்த தியாகராய நகரை சேர்ந்தவர் காளிதாஸ். இவருக்கு சிவகாசி அருகே சொந்தமாக 40 அறைகள் கொண்ட பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கம்போல் பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்கள் மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சில தொழிலாளர்கள் வெளியில் புல்வெளிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இயந்திரங்கள் மூலம் பொருட்களை அகற்றி கொண்டிருந்த சமயத்தில் புல்வெளியில் சிதறிக் கிடந்த கருமருந்தில் தீப்பற்றியது. புல்வெளி முழுவதும் ஆங்காங்கே மருந்துகள் கிடந்ததால் தீ மளமளவென ஆலையை சுற்றி ஏறிய தொடங்கிய பின் ஆலைகளின் அறைக்குள் வெப்பம் புகுந்தது.
இதை அறிந்தவுடன் தொழிலாளர்கள் விரைவாக ஆலையை விட்டு தப்பி வெளியே ஓடிய சில மணி நேரங்களில் பட்டாசுகள் வெடித்து சிதறி 40 அறைகளில் 5 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.