திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில், குண்டுபட்டி மலை கிராமத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் நடைபெற்ற இரவு விருந்தின்போது மது மற்றும் போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக மதுரை சிறப்பு போதை தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர். அங்கு இரவு விருந்தில் ஈடுபட்டிருந்த 250க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்த மது பாட்டில்கள், போதை பொருள்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். அதன்பின் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சமூக வலை தளங்களில் விளம்பரம் செய்யப்பட்டு அதன் மூலம் இளைஞர்கள் ஒன்றிணைந்து இரவு நேர விருந்து நடத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.