கிராமசபை கூட்டத்தில் பெண்ணுக்கு ஏற்பட்ட தாக்குதல் குறித்து டி.ஜி.பி மற்றும் எஸ்.பிக்கு தேசிய எஸ்.சி எஸ்.டி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திமுக சார்பில் ஸ்டாலின் தலைமையில் மக்கள் கிராமசபை கூட்டம் கோவை மாவட்டத்தில் உள்ள தேவராயபுரம் பகுதியில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் பூங்கொடி என்பவர் ஸ்டாலினுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அப்பெண்ணையும் அவருக்கு ஆதரவாக வந்த ராமன், முனி, மகேஸ்வரி ஆகியோரை கூட்டத்தில் இருந்து வெளியேற்ற அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தை குறித்து ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் தலைவரான கல்யாணசுந்தரம் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பூங்கொடிக்கு ஆதரவாக எஸ்.சி எஸ்.டி பிரிவில் வழக்கு பதிவு செய்யகோரி தேசிய எஸ்.சி எஸ்.டி ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் பேரில் தாழ்த்தப்பட்ட பெண்ணின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தமிழக டி.ஜி.பி மற்றும் கோவை மாவட்ட எஸ்.பி 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஆணை பிறப்பித்துள்ளது.