துபாயில் மிகப்பெரிய ராட்டின விழா பிரம்மாண்டமாக வானவேடிக்கைகளுடன் துவங்கப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள புளூ வாட்டர்ஸ் தீவில் Ain Dubai ferris wheel என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய ராட்டினம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு துபாயின் கண் என்று பொருள். இந்த ராட்டின துவக்க விழாவானது நேற்று முன்தினம் இன்னிசை கச்சேரி, உணவுக் கடைகள் மற்றும் கண்களை பறிக்கும் வான வேடிக்கையுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. மேலும் இது 11,210 டன் எஃகு கொண்டு உலகின் மிகப்பெரிய இரண்டு கிரேன்கள் மூலம் ஒன்றிணைக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. இது ஈபிள் கோபுரத்தை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட அளவை விட 33% அதிகமாகும். மேலும் முதல் நாளுக்கான டிக்கெட்கள் விரைவில் விற்று தீர்ந்துவிட்டன.
குறிப்பாக ராட்டினமானது ஒருமுறை சுற்ற 38 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். அதிலும் இதில் உள்ள 48 கேபின்களில் இருந்து 360 டிகிரி கோணத்தில் உள்ள காட்சிகளை தெளிவாக பார்க்க இயலும். குறிப்பாக பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு கேபினுக்கு அதிகபட்சமாக 10 முதல் 12 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் நேற்று துபாயின் பட்டத்து ஷேக் ஹம்தான் பின் முகமது அதன் மீது அமர்ந்து தேநீர் குடிப்பது போன்ற காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.