Categories
உலக செய்திகள்

மிரட்டி வரும் கொரோனா… விமான நிறுவனங்களுக்கு 11,300 கோடி டாலர்கள் இழப்பு..!!

 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நடப்பாண்டில் விமான போக்குவரத்து துறை நிறுவனங்களுக்கு 11,300 கோடி டாலர்கள் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 81 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை இந்த வைரஸ் தாக்கம் காரணமாக 3,200 க்கும் அதிகமானோர் பலியானதுடன், 95,000 த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொடிய வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன் காரணமாக முதற் கட்டமாகவே சீனாவிற்கு செல்லக்கூடிய விமான போக்குவரத்தை இலங்கை, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய  நாடுகள் இரத்து செய்தன. பின்னர் சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து தென் கொரியா, ஈரான், இத்தாலி போன்ற நாடுகளுக்கும் பயணம் செய்வதை தவிர்க்கும் படி கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நாடுகள் கேட்டுக் கொண்டன.

அதன்படி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணத்தால், கிட்டத்தட்ட உலக அளவில் 70 சதவீதமான விமான போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக, விமானச் சேவை நிறுவனங்களின் பயணிகள் வர்த்தகம் வாயிலான வருவாய் 6,300 கோடி டாலர்கள் முதல் 11,300 கோடி டாலர்கள் வரை குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகளவில் பயணிகள் வருவாயில் 19 சதவீதம் இழப்பு ஏற்படும் என்ற கணிப்பு விமான நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பாகவே இருக்கும் என்று சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, சர்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பு, விமான நிறுவனங்களுக்கு 2,930 கோடி டாலர் மட்டுமே இழப்பு ஏற்படும் என கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |