நைஜீரிய நாட்டை சேர்ந்த வியாபாரி அமெரிக்க டாலர்களை மாற்றுவதற்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நாதன் இட்சாகு என்பவர் திருப்பூரில் பல ஆண்டுகளாக பனியன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நாதன் அமெரிக்க டாலர் நோட்டுகளை கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கொடுத்து அதனை இந்திய ரூபாயாக மாற்றி கொடுக்குமாறு கூறியுள்ளார். அப்போது அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பாலச்சந்திரன் என்பவர் அந்த டாலர் நோட்டுகள் போலியானவை என்பதை கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் நாதன் இட்சாகுவை பிடித்து அவரிடம் இருந்த போலி அமெரிக்க டாலர் நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் தான் சில நாட்களுக்கு முன்பு நைஜீரியா சென்று விட்டு கோயம்புத்தூர் வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இவை போலி அமெரிக்க டாலர் நோட்டுகள் என்பது தனக்கு தெரியாது என காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.