3 1/2 லட்சம் வாங்கி கொண்டு போலியான பணி நியமன ஆணையை கொடுத்து வாலிபரை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் குட்டியப்பன் என்பவர் தலைமை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அம்பத்தூர் வரதராஜபுரம் பகுதியில் வசிக்கும் சுதர்சன் என்பவர் போலியான பணி நியமன ஆணையுடன் நீதிமன்ற வேலைக்கு வந்ததால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுதர்சனிடம் விசாரணை நடத்திய போது, வாலாஜா பகுதியில் வசித்து வரும் ராஜசேகர் என்பவர் 3 1/2 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு சுதர்சனுக்கு போலியான பணி நியமன ஆணையை வழங்கியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் ராஜசேகரை பிடித்து விசாரணை நடத்திய போது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எக்ஸாமினர் என்ற பணிக்கு மூன்று பேர் நியமனம் செய்யப்பட்டதாகவும், அந்த பணி நியமன ஆணை நகலை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ததாகவும் ராஜசேகர் தெரிவித்துள்ளார். மேலும் ராஜசேகர் அதிலிருந்த மாஜிஸ்திரேட்டு கையெழுத்தை போலியாக போட்டு 3 1/2 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு சுதர்சனை ஏமாற்றியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் வழக்குபதிந்து ராஜசேகரை சிறையில் அடைத்து விட்டனர்.