கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி கௌரிபேட்டை பகுதியில் பாக்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு வாலிபர் பாக்யராஜிடம் இருந்து பழங்களை வாங்கிவிட்டு 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். இதனை அடுத்து அது கள்ள நோட்டு என்பதை அறிந்த பாக்யராஜ் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் சென்னை பெரம்பூர் பகுதியில் வசிக்கும் சிவா என்பது தெரியவந்துள்ளது.
மேலும் காவல்துறையினர் அவரது கையில் வைத்திருந்த பையை சோதனை செய்து பார்த்த போது அதில் ஆயிரக்கணக்கான கள்ள ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது. இதனையடுத்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற குற்றத்திற்காக அந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த வாலிபர் கள்ள நோட்டுகளை யாரிடமிருந்து வாங்கியுள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.