மூதாட்டியின் கேள்விகளுக்கு துர்கா ஸ்டாலின் பதிலளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவியான துர்கா ஸ்டாலின் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். பின்பு அங்கிருந்து அவர் நான்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலுக்கு சென்றுள்ளார். அந்த கோவில் 8 சுயம்புத் தலங்களில் முதன்மையானதும் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் விளங்குவது.
அவர் நெல்லை வரும்போது இங்கு வருவது வழக்கமான ஒன்றாகும். அவ்வாறு அவர் சாமியை தரிசிக்க கோவிலுக்குள் சென்ற போது அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு வீடு திரும்பிய ஒரு 85 வயதுள்ள மூதாட்டி ஒருவரை பார்த்து துர்கா ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார். அப்போது அந்த மூதாட்டி நீங்கள் யார் ? என்று கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்தவர்கள் மூதாட்டியிடம் இவர்கள்தான் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மனைவி என்று கூறியுள்ளனர்.
அப்போது அந்த மூதாட்டி துர்கா ஸ்டாலினிடம் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் கோவிலுக்கு செல்வார்களா ? பெருமாள் மீது நம்பிக்கை உண்டா ? என்று கேட்டுள்ளார். அதற்கு துர்கா ஸ்டாலின் அவர்கள் பெருமாள் மீது மு.க.ஸ்டாலினுக்கு நம்பிக்கை உண்டு. அவர் கோவிலுக்கு வருவார் என்று பதிலளித்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.