இந்து பண்டிகைகளில் முக்கியமான ஒன்றாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை ஆண்டுக்கு இரு முறை கொண்டாடப்படுகின்றது. அதாவது முதலில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படும் சைத்ர நவராத்திரி அல்லது வசந்த நவராத்திரி என அழைக்கப்படுகிறது. இரண்டாவது அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் ஷரத் நவராத்திரி என அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் துர்கா தேவியினுடைய ஒன்பது அவதாரங்களும் ஒன்பது நாட்களில் விழா எடுத்து கொண்டாடப்படுகின்றது. இது இந்தியா முழுவதும் பல பகுதிகளில் பெரும் உற்சாகத்துடனும் பக்தியுடனும் விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. இப்போது நாம் ஷரத் நவராத்திரி பூஜை பற்றி விரிவாக பார்க்கலாம்.
நவராத்திரி என்பது துர்கையின் ஒன்பது அவதாரங்களும் ஓன்பது நாட்களில் விழா எடுத்துக் கொண்டாடப்படுகின்றது. இந்த ஒன்பது புனித நாட்களிலும் முழு பக்தியுடன் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு துர்க்கை தேவியின் முழு ஆசீர்வாதமும் கிடைப்பதாக நம்பப்படுகிறது. மேலும் அனைத்து பிரச்சனைகளும் விலகி தங்களுடைய விருப்பங்களும் நிறைவேறுவதாக கூறப்படுகிறது. இந்த நவராத்திரி குஜராத்தில் தாண்டியா என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அது போல் வங்காளதேசத்தில் சப்தமி முதல் தசமி வரையிலான நான்கு நாட்களில் விழா எடுத்து விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. அந்த காலகட்டத்தில் தீவிர பூஜைகளும் சடங்குகளும் நடத்தப்படுகின்றன. குறிப்பாக தமிழகத்தில் இந்த விழா துர்கா, சரஸ்வதி மற்றும் லக்ஷ்மி தேவியை வழிபடுவதன் மூலம் கொண்டாடப்படுகின்றது. மேலும் பஞ்சாபில் பக்தர்கள் ஏழு நாள் விரதம் இருந்து 8 நாளில் ஒன்பது சிறுமிகளுக்கு உணவு பரிமாறி அவர்களின் கால்களை தொட்டு ஆசீர்வாதம் பெற்று கன்னியா பூஜை செய்து விரதத்தை முறிப்பார்களாம். அதேபோல் வேறு சில மாநிலங்களிலும் துர்க்கையை மகிழ்விக்க தங்களின் தனித்துவமான சடங்குகளை செய்து வழிபடுகின்றனர்.