தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் பிரசவத்தின்போது பெண் உயிரிழந்ததாகக் கூறி அவரின் உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சித்தர்காடு பகுதியில் வசித்து வருபவர் இளையராஜா. இவருடைய மனைவி ராஜகுமாரி கடந்த 22ஆம் தேதி பிரசவத்துக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கடந்த 24 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த சமயத்தில் ராஜகுமாரிக்கு திடீரென உடல்நிலை மோசமானதால் அவரும் அவருக்கு பிறந்த பெண் குழந்தையும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு ராஜகுமாரி தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் ராஜகுமாரி பெற்றெடுத்த பெண் குழந்தைக்கு தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராஜகுமாரியின் உறவினர்கள் மற்றும் சி.பி.ஐ கட்சியினர் ஒன்று சேர்ந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் ராஜகுமாரி இறந்துவிட்டதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.