இலங்கை சுற்றுப்பயணத்தின் போது, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கும் கொரோனா இதுவரை 4600க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கின்றது. மேலும் 1 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்து அணி இலங்கைக்கு வந்துள்ளது. இதையடுத்து கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் (joe root), கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதை தடுக்கும் வகையில் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது கைகுலுக்கல், செல்பி எடுத்தல், ஆட்டோகிராப் கையொப்பமிடுதல் மற்றும் தேவையற்ற சந்திப்புகளைத் தவிர்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.