கன்னியாகுமரி எல்லைக்குள் வரும் வெளிமாநில வாகனங்களுக்கு இ- பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதேபோன்று கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த ஆண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வெளி மாநிலங்களிலிருந்து தமிழகதிற்கு வாகனங்களில் வருபவருக்கு இ-பாஸ் முறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அந்தந்த எல்லை பகுதியில் சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலையிலும் வெளி மாநிலங்கள் இருந்து கன்னியாகுமரி வரும் வாகன ஓட்டிகளுக்கு இ -பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிப்பதற்காக குமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழியில் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது நெல்லை மாவட்டத்திலிருந்து குமரி மாவட்டத்திற்கு வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி இ- பாஸ் முறை சரியாக இருந்தால் மட்டுமே அனுமதித்துள்ளனர். மேலும் இ- பாஸ் இல்லாமல் வந்த வாகன ஓட்டிகளை காவல்துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.