ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களை பொருத்தவரையில் இ பாஸ் செயல்முறை குழப்பத்தை ஏற்படுத்துவதாக அம்மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு தமிழகத்தில் அமலில் இருக்கும் பட்சத்தில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு கட்டாயம் இ பாஸ் தேவைப்படுகிறது. இ பாஸ் இல்லாமல் வேறு மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அடுத்த மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்நிலையில் நாமக்கல்லில் இருந்து பல பொதுமக்கள் இ பாஸ் இல்லாமல் கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி வழியாக ஈரோடு மாவட்டத்திற்குள் நாள்தோறும் சென்று வருகிறார்கள். இந்நிலையில் இன்று அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நாமக்கல் மாவட்ட பகுதியிலிருந்து இ பாஸ் இல்லாமல் வந்த மக்களை தடுத்து நிறுத்தி திரும்பிச் செல்லுமாறு வலியுறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களில் சிலர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின் இ பாஸ் கேட்டதற்காக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு கார் வேன் இருசக்கர வாகனம் உள்ளிட்ட எதுவும் செல்ல முடியாமல், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அதிகரித்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், திணறிய காவல்துறையினர் அவர்களிடம் இ பாஸ் ஏதும் கேட்காமல் ஈரோடு மாவட்டத்திற்குள் அனுமதித்தனர்.
பின் கூட்டம் குறையும் பட்சத்தில் சோதனையை தீவிரப்படுத்தி வருபவர்களிடம் இ பாஸ் கேட்டும், பின் மீண்டும் கூட்டம் அதிகரித்தால் இ பாஸ் இல்லாமலும் ஈரோடு மாவட்டத்திற்குள் மக்களை காவல்துறையினர் அனுமதி வந்தனர். இப்படி இ பாஸில் தெளிவான ஒரு வரைமுறை இல்லாமல் காவல்துறையினர் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அனுமதிப்பதும், கூட்டம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திருப்பி அனுப்புவதும் ஆக இருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.