பிரிட்டனில் ‘எர்த்ஷாட்’ பரிசுக்கான இறுதி சுற்றுக்கு இந்தியாவை சேர்ந்த இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக எர்த் ஷாட் பெயரில் பிரிட்டன் அரச குடும்பத்தின் ராயல் அறக்கட்டளை ஆண்டுதோறும் 5 பேரை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான அந்த பரிசுப் போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்தியாவைச் சேர்ந்த வினிதா உமாசங்கர் மற்றும் வித்யூத் மோகன் உட்பட 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியான வினிதா உமாசங்கர் சூரிய ஆற்றலின் மூலம் இயங்கும் தள்ளுவண்டி இஸ்திரி பெட்டி ஒன்றை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கரிக்கு மாற்று கிடைத்துள்ளது.
மேலும் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரான வித்யூத் மோகன் நடத்தும் தகாசாகர் நிறுவனம் விவசாய கழிவுகளை வாங்கி அதனை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் கரியாக மாற்றும் சேவையை செய்து வருகிறது. இதன் மூலம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய கழிவுகள் எரிக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சேவைகளுக்காக எர்த் ஷாட் பரிசு போட்டிக்கான இறுதி சுற்றுக்கு இவர்கள் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த விருதை பெறும் ஐந்து பேருக்கும் தலா ரூபாய் 10 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.