பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொது மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வட மாநிலங்களான டெல்லி, ஜம்மு மற்றும் பஞ்சாப் போன்ற இடங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொது மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் இரவு 10:34 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருக்கிறது என தேசிய நிலநடுக்க மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நிலநடுக்கமானது ஜலந்தர் நகரிலும் உணரப்பட்டதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பயத்தில் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் குறித்து பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கூறும்போது, அமிர்தசரஸ் மற்றும் பஞ்சாபில் உள்ள பிற பகுதிகளில் நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்படவில்லை என உயரதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நொய்டா நகர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலம் போன்ற இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.