நுட்பமாக, மிக கச்சிதமாக இயங்ககூடிய இயற்கை உருவாக்கியுள்ள இயந்திரம் தான் உங்கள் இதயம். அது முழு செயல் திறனுடன் இயங்க வேண்டுமென்றால், நீங்கள் அதற்கு ஆரோக்கியமான எரிபொருளை கொடுக்க வேண்டும். அதாவது இதயத்தின் நலம் காக்கும் உணவு முறையை பின்பற்ற வேண்டும். இதய நலம் காக்கும் உணவுகள் உங்களுக்காக இதோ :
பெர்ரிகள் :
இதய நோய் ஆபத்தை குறைக்க பெர்ரி வகை பழங்கள் மிகச் சிறந்தவை. பெர்ரிகளில் நார்ச்சத்து, போலேட், இரும்பு, கால்சியம், விட்டமின் ஏ, விட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றில் கொழுப்பு மிக குறைவு.
ஓட்ஸ் :
ஓட்ஸ் என்று அழைக்கப்படும் ஓட்மீல் நீண்ட நேரம் பசியை தள்ளிப்போடுவதுடன் தொடர்ந்து சாப்பிடும் போது இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும் இது மிகச் சிறந்த உணவாகும். இதில் உள்ள நார்ச்சத்து கெட்ட கொழுப்பை குறைத்து இதயத்தை காக்கிறது.
நட்ஸ் :
பாதாம், வால்நட், வேர்க்கடலை, பிஸ்தா, வால்நட், உள்ளிட்ட கொட்டைகள் மற்றும் பருப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு உகந்தவை. இவற்றில் புரதம், நார்ச்சத்து, தாதுச் சத்துக்கள், விட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன.
பிரக்கோலி :
பிரக்கோலியில் விட்டமின் சி மற்றும் புரதச் சத்துக்கள் நிறைந்து உள்ளது. இதய ரத்தநாள நோய்களைத் தடுப்பதிலும், ரத்த அழுத்தத்தைக் குறைப்பதிலும் பிரக்கோலி முக்கிய பங்காற்றுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
சிவப்பு ஆப்பிள்கள் :
இதய நோய் ஆபத்தை குறைக்கும் உணவுகளில் ஆப்பிள்களும் ஒன்றாகும். இதில் கரையும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இது கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது. தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் ரத்த குழாய்கள் கடினமாவதை 40 சதவிகிதம் வரை தடுக்கலாம்.
சால்மன் மீன் :
சால்மன் மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ரத்த அழுத்தத்தை குறைத்து ரத்த நாளங்களில் உறைவதைத் தடுக்கின்றன. வாரம் இரண்டு முறை சால்மன் மீன் உட்கொள்வது இதய நோய் ஏற்படும் ஆபத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்கும். இந்த சால்மன் மீனுக்கு இணையான சத்துக்களுடன் நம்மூரில் கிடைப்பது மத்திமீன் ஆகும்.
இதயத்தை வலுவாக்கும் வழிகள் :
- தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்.
- புகைப்பிடிப்பதை கைவிடுங்கள்.
- அளவுக்கதிகமான உடல் பருமனை, கொழுப்பை குறிப்பாக தொப்பையை குறையுங்கள்.
- மது அருந்துவதை குறையுங்கள்.
- அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிருங்கள்.
- மன அழுத்தம் தவிருங்கள்.
உங்களுக்கு தெரியுமா ?
ஒவ்வொரு ஆண்டும் இதய ரத்த நாள நோய்கள் CVD காரணமாக உலகம் முழுவதும் 1.7 கோடி பேர் மரணமடைகின்றனர். இது உலக சிறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மரணங்களில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமான மரணங்கள் நடுத்தர வயதுள்ளவர்களிடையே தான் ஏற்படுவதாக கூறப்படுகிறது.