பொருளாதார சீரமைப்புத் திட்டங்கள் குறித்த 5ம் கட்ட அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் இன்று காலை வெளியிட உள்ளார்.
பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து 5ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு வெளியிட உள்ளார்.
ஏற்கனவே தொடர்ந்து 4 நாட்களாக இதுகுறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதில் சிறு, குறு தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழை மக்கள், விவசாயிகள், மீனவர்கள், கனிமங்கள், நிலக்கரி உற்பத்தி, ராணுவ தளவாட உற்பத்தி, மின் விநியோகம் விண்வெளி அணுசக்தி துறை உள்ளிட்டவற்றிற்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு 5ம் கட்ட அறிவிப்புகளை வெளியிட உள்ளார். அதில் கல்வி, மருத்துவம், ரயில்வே துறை, சுற்றுலா துறைகளுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே 4ம் கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பு குறித்த அறிவிப்புகளும் வெளியாக உள்ளது. எனவே தான் மாலை நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பானது இன்று காலை 11 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.