மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான், மக்கள் அதிகாரம் அமைப்பாளர் முரளி மற்றும் பெரும்பாலானோர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் திருவாரூர் விளமல் பகுதியில் மன்னார்குடிக்கு செல்லும் சாலையில் 2 மதுபான கடைகள் இருக்கின்றது. இந்த பகுதியில் கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், முதன்மை கல்வி அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகம் என பல்வேறு அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் பிரதான சாலை இருக்கின்றது.
மேலும் புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கின்றது. இதனையடுத்து திருவாரூர்- மன்னார்குடி சாலை, தஞ்சை-நாகை சாலை, திருவாரூர்-கும்பகோணம் சாலை என அனைத்து சாலைகளையும் இணைக்கின்ற முக்கிய பகுதியாக இருகின்றது. அதிலும் குறிப்பாக அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைக்காக செல்லும் 108 ஆம்புலன்ஸ்கள் எந்தநேரமும் செல்கின்ற பகுதியாகவும் இருக்கின்றது. இதனால் எந்த நேரமும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருந்து வருகின்றது. இந்த பிரதான சாலையில் உள்ள 2 மதுபான கடைகளிலும் எப்போதும் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. அவர்களுடைய வாகனங்கள் அங்கு நிறுத்தப்படுவதால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த 2 மதுபான கடைகளையும் அடைக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.