அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமாரின் மகளுக்கு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தின் போது மேற்படி 50 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ அய்யனார் மற்றும் கருப்பசாமி திருக்கோவிலுக்கு ஆர்.பி உதயகுமார் தன்னுடைய குடும்பத்துடன் பத்திரிக்கை வைப்பதற்காக வந்திருந்தார். அப்போது ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொள்ளப்படுவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு ஆர்பி உதயகுமார், அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி வழிநடத்த இருக்கிறார். அதற்கு நாங்களும் உறுதி எடுத்து இருக்கிறோம். அந்த பயணத்தில் நாங்கள் எல்லோரையும் அழைக்கத்தான் செய்கிறோம். அனைவரையும் சிவப்பு கம்பளம் விரித்து வருக வருக என அழைப்பதற்கு அதிமுக ஒருபோதும் தயங்கியதே கிடையாது. ஆனால் செய்திகளில் வரும் தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டு பெரிய அளவில் இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தாயுள்ளத்துடன் அனைவரையும் ஒன்றிணைத்து அரவணைப்போடு செல்கிறார்.
அதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லாத நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக கட்சியை நங்கள் சிறப்பாக வழி நடத்தி ஒருங்கிணைத்து செல்வோம். அதிமுகவில் 2 பேரின் தலைமை இருந்தபோது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. கொங்கு மண்டலத்தில் மட்டும்தான் 100 சதவீதம் வெற்றி கிடைத்தது. ஆனால் மற்ற இடங்களில் வெற்றி கிடைக்காததற்கு 1000 காரணங்களை சொல்லலாம். ஆகவே காலத்திற்கு ஏற்றார் போன்று முடிவுகளை எடுத்தால்தான் இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி செல்ல முடியும். மேலும் அனைத்து தொண்டர்களின் கருத்துக்களை கேட்டுதான் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் தனி நபர்களின் முடிவு என்று எதுவுமே கிடையாது என்று கூறினார்.