திமுக நடத்த இருந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை எடப்பாடி தனது அரசியல் தந்திரத்தால் முடக்கியுள்ளார்.
உலகமே கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்களை வீட்டில் முடங்கி அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்ற சூழலை நாம் பார்க்கிறோம். கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் பாதிப்பு, உயிரிழப்பு லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் பல்வேறு நாடுகள் கொரோனவை கட்டுபடுத்த முன்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆளும்கட்சியுடன் அமர்ந்து பேசி கொரோனவை கட்டுப்படுத்த, மக்கள் வாழ்வாதாரத்திற்கான தேவைகளுக்கான ஆலோசனையை வழங்கி வருகின்றன. இந்தியாவிலும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளுடனும், முன்னாள் பிரதமர், முன்னாள் குடியரசுத் தலைவர் என அனைவரிடமும் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆனால் தமிழகத்திலோ நிலைமை வேறுமாதிரி இருக்கிறது. தமிழகத்திற்கு இதுபோன்ற ஒவ்வொரு பேரிடர்கள் வரும்போதெல்லாம் அதிமுகவும், திமுகவும் எதிரெதிர் திசையில் என்று அடித்துக் கொள்வது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் மக்களின் நலன் கருதி ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் எந்தவிதமான அரசியல் மோதல், கருத்து மோதல் இருந்தாலும் மக்களுக்காக ஒன்றாக இணைந்து அமர்ந்து பேசி முடிவுகளை எடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி வருகின்றன.
தொடக்கத்தில் கொரோனாவால் அதிகமான பாதிப்பை சந்தித்த கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அமர்ந்து பேசி பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை மக்களுக்கு ஏற்படுத்தினார். குறிப்பாக 20,000 கோடி ரூபாயில் மக்களுக்கு பல்வேறு சலுகை அறிவிப்புகளை கேரள மாநிலம் அரசு அறிவித்து. இன்று கேரளா கொரோனவை கட்டுப்படுத்துவதில் நாட்டிற்கே முன்மாதிரி மாநிலமாக இருக்கிறது.
தமிழகத்திலோ தொடர்ந்து ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் அரசியல் செய்து வருகின்றன. இந்நிலையில்தான் ஊரடங்கு உத்தரவு இன்றோடு முடியும், நாளை அனைத்து கட்சி கூட்டம் நடத்தலாம் என்று திமுக ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திரமோடி மேலும் 19 நாட்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவித்தார். இதனால் திமுக நடத்த இருந்த அனைத்து கட்சி கூட்டம் கேள்விக்குறியாகியது.
இதையடுத்து சென்னை தேனாம்பேட்டை போலீசார் திமுகவிடம் அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து விளக்கம் கேட்டு, 144 தடை உத்தரவு இதுபோல கூட்டம் நடத்துவது சரியில்லை என்று தெரிவித்து திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தடை விதித்தது. சமூக இடைவெளியை பின்பற்றி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என்று திமுக தெரிவித்திருந்தது.
எப்படியாவது திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அரசியல் செய்துவிடக் கூடாது என்பதை உணர்ந்த எடப்பாடி திமுக கூட்டம் நடத்தாதவாறு செக் வைத்து அதிமுகவின் அரசியல் நகர்வை நிகழ்த்தினார். இதனால் திமுக தரப்பு அரசு மீது கடுப்பில் உள்ளதாக தெரிகின்றது.
திமுகவிடம் தேனாம்பேட்டை போலீஸ் விளக்கம் கேட்டுக்கொண்டு இருந்த நிலையில் எடப்பாடியின் அரசியல் ஆட்டம் தொடங்கியது. அதாவது தமிழ்நாடு நகர் காவல் சட்டம் 1888 பிரிவு 41 உட்பிரிவு 2இல் அளிக்கப்பட்ட அதிகாரத்தின் படி சென்னையில் 28ஆம் தேதி வரை கூட்டம் கூடுதல், ஆர்ப்பாட்டம், பேரணி மனிதசங்கிலி நடத்த தடை என்ற உத்தரவு பிறப்பிக்க வைத்து திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தை எடப்பாடி முற்றிலும் முடக்கியுள்ளார்.