செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டினுடைய எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநரை சந்தித்து பொய்களினுடைய ஒட்டுமொத்த வடிவமாக புனைந்துறைகள் நிரம்பிய புளுகு மூட்டைகளை அவரிடத்திலே ஒரு கோரிக்கை மனுவாக அளித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்து இருக்கிறார்.
அதிமுகவை யார் கைப்பற்றுவது ? என்று இப்போது அவர்களுக்கிடையே பெரிய யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த யுத்தத்திலே தான் வெற்றி பெற வேண்டி தன்னுடைய எஜமானர்களை சென்று சந்தித்து விட்டு, அதே கையோடு இப்போது தான் எதிர்க்கட்சியின் தலைவர் என்ற நினைப்பு திடீரென்று வந்தவுடன், சென்னையிலே ஆளுநரையும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சந்தித்து விட்டு வந்திருக்கிறார்.
அந்த அறிக்கையிலே சொன்னதாக பல்வேறு கருத்துக்களை சொல்லி இருக்கிறார். கோவையிலே நடைபெற்ற கேஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் அக்டோபர் 23ஆம் தேதி நடந்தது. கணியாமூரிலே இருக்கக்கூடிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய அந்த பள்ளி சம்பவம் ஜூலை மாதம் 17ஆம் தேதி நடந்தது. கால்பந்தாட்டம் வீராங்கனை பிரியாவின் உடைய மரணம் நவம்பர் 15ஆம் தேதி நடக்கிறது.
இப்படி பல்வேறு காலகட்டங்களிலே பல மாத இடைவேளைகளில் நடந்த சம்பவங்களுக்கெல்லாம் திடீரென்று ஞான உதயம் வந்தவராக கும்பகர்ணன் தூக்கத்திலிருந்து முழித்துக் கொண்டவராக திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், இவற்றையெல்லாம் தூக்கிக் கொண்டு போய் ஆளுநரை போய் சந்தித்திருக்கிறேன் என்று சொல்வதற்கு என்ன உண்மையான காரணம் ? என்பதை நான் கேட்க விரும்புகிறேன் என விமர்சனம் செய்தார்.