அதிமுக தொண்டர்களிடம் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, இன்றைக்கு நாங்கள் ஆட்சியிலே இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களுக்கு பிரச்சனை ஏற்படுகின்ற போது முதல் குரல் கொடுக்கின்ற கட்சி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி. ஒரு ஐந்து நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணை நிரம்பி உபரிநீராக சுமார் 2 லட்சம் கன அடிக்கு மேலாக காவிரி காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
அந்த காவிரி கரையில் இரு புறங்களிலும் இருக்கின்ற மக்கள், தாழ்வான பகுதியில் குடியிருக்கின்ற மக்கள், அந்தப் பகுதியில் காவிரி நீர் புகுந்து கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். எந்த அமைச்சர்களும் சென்று பார்க்கவில்லை, எந்த அதிகாரிகளும் சென்று பார்க்கவில்லை… நான் போனதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கு இருக்கின்ற முன்னாள் அமைச்சர் தங்கமணி இடத்திலும், கே.பி கருப்பண்ணன் இடத்திலும் சொன்னேன். உடனடியாக ஸ்டாலின் உத்தரவு போட்டு அந்த நாமக்கல் மாவட்ட அமைச்சர் 2 மணிக்கு கூட்டத்தை போட்டு அமைச்சரை அழைத்து வந்து பார்வையிட்டு சென்றிருக்கிறார்.
அரசாங்கம் செய்த வேலையை பாருங்கள், இந்த அரசாங்கத்தின் நிலைமையை பாருங்கள், இன்றைக்கு மக்கள் வெள்ளத்திலே பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணமும் வழங்கவில்லை, அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, உணவு, இருப்பிடம் எதுவுமே கண்டுகொள்ளாத அரசாங்கம் ஸ்டாலின் அரசாங்கம்.
ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி அவர்கள், கே பி கருப்பண்ணன் அவர்களும் ஆட்சியில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆட்சியாளர்கள் மக்களை பாதுகாவிட்டாலும் பரவாயில்லை, நாங்கள் உங்களுக்கு பலமாக இருக்கிறோம் என்று சொல்லி அந்த பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து, அவர்களுக்கு மூன்று வேலையும் உணவுகளை கொடுத்து, மருத்துவ வசதி கொடுத்து, நிவாரண பொருட்களை கொடுத்த ஒரே கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சிதான்.
எந்த கட்சி போய் சென்று பார்த்தது. இன்று வாய் கிழிய பேசுகிறார்கள் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், எந்த கட்சியாவது மக்களை பார்த்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்களா? இன்றைக்கு ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கடைக்கோடியில் இருக்கின்ற ஏழைகளை சிந்தித்துப் பார்த்து அவர்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கின்ற ஒரே கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சி என தெரிவித்தார்.