ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து மர்ம நபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வேப்பத்தூர் மெயின் ரோட்டில் பாங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் ஏ.டி.எம் இயங்கி வருகிறது. இங்கு அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம் அறைக்குள் புகுந்து தான் கொண்டுவந்த கடப்பாரையால் எந்திரத்தை உடைத்து அதில் உள்ள பணத்தை திருட முயற்சி செய்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சி.சி.டிவி கேமரா மூலமாக சென்னை தலைமை அலுவலகத்தில் உள்ள திரையில் தெரிந்துள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த கண்ணன் என்பவர் இதுகுறித்து சென்னை அலுவலக கண்காணிப்பாளர்களுக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின்படி அவர்கள் சம்பந்தப்பட்ட வங்கி கிளை மேலாளர் ராம்பிரசாத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து ராம்பிரசாத் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் வங்கி கிளை மேலாளரான ராம்பிரசாத் மற்றும் அதன் அலுவலர்கள் அனைவரும் ஏ.டி.எம்முக்கு திரண்டு சென்றனர். இதனை பார்த்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இவ்வாறு ஏ.டி.எம் மையத்திற்குள் நுழைந்த நபர் கடப்பாரையால் எந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அதை உடைக்க முடியாததால் மர்ம நபர் பணத்தை கொள்ளையடிக்கவில்லை என்று காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிவேந்தன், இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் காவல்துறையினர் ஏ.டி.எம் மையத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.