கன மழையினால் மண் சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் தாய் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மரப்பாலம் நேதாஜி வீதியில் கருப்பண்ணசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினர் மகன் ராமசாமிக்கு திருமணம் முடிந்து மனைவியுடன் வளையக்கார வீதியில் வசித்து வருகின்றார். இதில் ராஜம்மாள் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ராமசாமி தனது தாய் ராஜம்மாளை பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து தொடர் மழை காரணமாக ராமசாமி, தனது தாய் ராஜம்மாளின் வீட்டில் தங்கியிருந்தார். அந்த வீடு மண் சுவரினால் கட்டப்பட்டு ஓட்டினால் மேற்கூரை வேயப்பட்டு இருந்தது. இந்நிலையில் அதிகாலை பெய்த மழையின் காரணமாக வீட்டின் மண் சுவர் இடிந்து ராஜம்மாள் மற்றும் ராமசாமி மீது விழுந்து விட்டது. இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய ராஜம்மாள் மற்றும் ராமசாமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த நிலையில் ராஜம்மாளை மீட்டனர். மேலும் அவருடைய மகன் ராமசாமி லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜம்மாளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.