அரசு பேருந்தின் மீது கல் வீசிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது மர்ம நபர்கள் திடீரென கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இதனால் பேருந்தில் இருக்கும் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்துள்ளது. இதனை அடுத்து டிரைவர் மற்றும் கண்டக்டர் பேருந்தை நிறுத்திவிட்டு மர்ம நபர்களை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இது குறித்து பேருந்து கண்டக்டரான தங்கராசு என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தீவிரமாக தேடி வந்துள்ளனர். அதன்பிறகு விருப்பாச்சி புரத்தில் வசிக்கும் கணேஷ், ரசூல், சூர்யா, அப்பு ஆகிய 4 பேர் பேருந்தின் கண்ணாடியை உடைத்தது தெரியவந்துள்ளது. இவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.