Categories
கொரோனா தேசிய செய்திகள்

தனியார் மருத்துவமனைகளுக்கு செக்…. கர்நாடகாவில் அதிரடி அறிவிப்பு…. உத்தரவிட்ட எடியூரப்பா …!!

கொரோனா நோயாளிகளுக்கு 50% படுக்கை வசதி அளிக்காத தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடியூரப்பா எச்சரித்துள்ளார்

சென்ற  மார்ச் மாதத்தில் தொடங்கிய கொரோனா தொற்று பரவல் தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த 3 மாத காலமாக குறைவான அளவில் இருந்த பாதிப்பு  சென்ற ஜூன் மாதம் முதல் தினத்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த நிலையில் இருக்கிறது. குறிப்பாக பெங்களூருவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் 2,000 க்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதன் காரணமாக அரசு மருத்துவமனைகள் போதி இடமில்லாமல் நிரம்பி வழிகின்றன. இதனை அடுத்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாத கொரோனா நோயாளிகள்  தனியார் மருத்துவமனைகளை நோக்கி செல்கின்ற சூழல் ஏற்படுகிறது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுக்கும் சம்பவங்களும்,  கொரோனா பாதிப்புள்ளவர்கள் உயிரிழக்கும் சம்பவமும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூரு தென் மண்டல கொரோனா தடுப்பு பொறுப்பாளர்களுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், தென் மண்டல பொறுப்பாளரான மந்திரி ஆர்.அசோக், தேஜஸ்வி சூர்யா எம்.பி. மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.  இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியதாவது:-“கொரோனா  வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 50 சதவீத படுக்கைகளை ஒதுக்குமாறு தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவர்களுடன் 4 முறை ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளேன். ஆனாலும் அவர்கள் அரசு விதித்துள்ள உத்தரவை பின்பற்றியதாக தெரியவில்லை.

அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறிவிட்டு பிறகு அதைப்பற்றி அவர்கள் கண்டுகொள்வது இல்லை. அதனால் 50 சதவீத படுக்கைகளை ஒதுக்காத தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் அதிகாரிகள் காரணங்கள் எதும் கூறக்கூடாது. தயவு தாட்சண்யம் பாராமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அத்தகைய மருத்துவமனைகள் மீது பேரிடர் நிர்வாக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பெங்களூரு தென் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பொறுப்பாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் 10 நாட்களில் பாதிப்பை குறைக்க வேண்டும்” என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

Categories

Tech |