அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவாக தமிழர்கள் துணை நிற்க வேண்டுமென்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில், “ஈழத் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை, மனித உரிமை மீறல் போன்ற செயல்களில் சிங்கள அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனால் இத்தகைய செயல்களை செய்யும் சிங்கள அரசிற்கு ஆதரவாக தீர்மானத்தை ஐநாவின் மனித உரிமை பேரவையில் பிரிட்டன் அரசு கொண்டு வர உள்ளது.
இந்த தீர்மானத்திற்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் வாக்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து பிரிட்டனில் ஈழத் தமிழ் பெண்ணான அம்பிகை செல்வகுமார் 11 நாட்களாக லண்டனில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். உலக தமிழ் பேரவை அமைப்பின் சார்பில் அம்பிகை செல்வகுமாரின் போராட்டத்திற்கு நாம் ஆதரிக்க வேண்டும். மேலும் அவரது உயிரை காப்பாற்ற உலகத்தமிழர்கள் அனைவரும் முன்வர வேண்டும்.
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் சிங்கள அரசிற்கு ஆதரவாக பிரிட்டன் அரசு கொண்டுவர இருக்கும் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும். மேலும், சிங்கள அரசை ஐ.நா நீதிமன்றத்திற்கு முன்பு ஒரு குற்றவாளியாக நிறுத்த தகுந்த நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். உலக தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவரான சீவரத்தினத்தின் மகள் தான் உண்ணாவிரத போராட்டமிருக்கும் அம்பிகை செல்வகுமார் .
அம்பிகை செல்வகுமார் தனது உயிரையும் தியாகம் செய்து ஈழத்தமிழர்களுக்காக 11 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். எனவே அவரது உண்ணாவிரத போராட்டம் வெற்றி பெற வேண்டும் . அதற்கு உலகத் தமிழர்கள் அனைவரும் துணையாக நிற்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என பழ. நெடுமாறன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.