அணுசக்தி திட்டத்தின் ஒப்பந்த பேச்சுவார்த்தையில் மேற்கத்திய நாடுகளின் வற்புறுத்தல்கள் இருக்கக் கூடாது என ஈரான் நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
ஈரான், அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், ஃப்ரான்ஸ், சீனா,ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையில் அணுசக்தி திட்டத்திற்க்கான ஒப்பந்தம் இருந்துள்ளது. அந்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்கா விலகியுள்ளது. அப்போதிருந்து ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகின்றது. இதனையடுத்து ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் வைத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அணுசக்தி திட்ட ஒப்பந்தத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஏழு நாடுகளில் அமெரிக்காவை தவிர்த்த மற்ற ஐந்து நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின் ஈரானில் புதிய அதிபருக்கான தேர்தலையோட்டி அணுசக்தி திட்ட ஒப்பந்தத்திற்கான ஆலோசனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய அதிபர் இப்ராகிம் ரைசி ஆகஸ்ட் மாதம் பதவியேற்ற பின்னரே நிறுத்தி வைக்கப்பட்ட ஆலோசனை மீண்டும் தொடங்கப்படும் என ஈரான் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மேற்கத்திய நாடுகளின் வற்புறுத்தல்கள் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அறிவித்துள்ளார்.
இதுக்குறித்து ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி கூறியதாவது “அணுசக்தி திட்ட ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தை கண்டிப்பாக எங்கள் அரசாங்கத்திற்கு மையமாக அமையும். அதனால் எங்கள் அரசு அதில் கூடுதல் கவனம் செலுத்தும். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எங்கள் அரசுக்கு எதிராக புதிய தடைகள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் வற்புறுத்தல்கள் இருக்கக்கூடாது. மேலும் மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்கள் இருந்தால் இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெறாது” எனக் கூறியுள்ளார்.