திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தன்மானம், இனமானம் என்கின்ற இந்த இரண்டையும் தமிழ் மக்கள் நெஞ்சில் விதைத்தது திராவிட இயக்கத்தின் உடைய வெற்றி. திராவிட இயக்க கொள்கையை மையப் பொருளாகக் கொண்டு இந்த திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி கொண்டிருக்கிறோம். இந்த திராவிட மாடல் ஆட்சியின் கொள்கையை…. வலிமையை… நான் கலைஞரிடம் இருந்தும், பேராசிரியரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன்.
அதே போல் அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் நம்முடைய இளைஞர் அணி சார்பில், மாணவர் அணி சார்பிலே 234 தொகுதிகளில் திராவிட மாடல் பாசறை கூட்டம் என்கின்ற கூட்டங்களை நாம் நடத்தி முடித்திருக்கிறோம். நடத்தி முடித்து இருக்கின்ற இளைஞர் அணிக்கு, மாணவர் அணிக்கு என்னுடைய வாழ்த்துக்களை இந்த நேரத்தில் தெரிவிக்கிறேன்.
அதே நேரத்தில் அதை ஒன்றிய அளவில்… கிராம அளவில்… பட்டி தொட்டிகள் தோறும்… இந்த பாசறை அமைப்பு கூட்டம் தொடர்ந்து நடைபெறும். இது தான் நாம் பேராசிரியருக்கு செலுத்த வேண்டிய உண்மையான மரியாதையாக அமைந்திட முடியும். அவருடைய புகழுக்கு பெருமை சேர்த்திட முடியும். தமிழர் இருக்கும் வரை… தமிழ்நாடு இருக்கும் வரை… திராவிட ம் இருக்கும் வரை… திருக்குறள் இருக்கும் வரை… பேராசிரியர் புகழ் இருக்கும் என தெரிவித்தார்.