எகிப்திய மம்மி குறித்த ரகசியங்களை கண்டுபிடிப்பதற்காக இத்தாலி மருத்துவமனையில் CT ஸ்கேன் பயன்படுத்தப்பட்டு ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
பண்டைய எகிப்திய மம்மி ஒன்று முதல் முறையாக நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மனித உடலில் நகர்வுகள் மற்றும் தகவல்களை பகுப்பாய்வு செய்து படத்தின் மூலம் விவரங்களை சேகரிக்க பயன்படுத்தும் CT ஸ்கேன் கொண்டு எகிப்திய மம்மியின் பதப்படுத்தப்பட்ட உடலில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தாலிய நகரமான பெர்கமோவின் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் இருந்த பண்டைய எகிப்து பாதிரியாரான அங்கேகோன்சுவினின் பதப்படுத்தப்பட்ட உடலானது மிலானின் மருத்துவமனைக்கு சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
அந்த மருத்துவமனையில் கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை முறை மற்றும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் பழக்கவழக்கங்கள் குறித்து ஆராய்வதற்காக வல்லுநர்கள் அந்த மம்மியை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். மேலும் எகிப்திய பாதிரியாரின் மரணம் மற்றும் வாழ்க்கை முறை குறித்து மறுநிர்மாணம் செய்து எந்த வகையான பொருள்கள் கொண்டு அவரது உடல் பதப்படுத்தப்பட்டது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் அறிந்து கொள்ளலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பண்டைய காலத்தில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் நோய்களை கண்டுபிடிப்பது நவீன மருத்துவ ஆராய்ச்சிக்கு முக்கியமானது என்று கூறப்படுகிறது.