திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்துள்ள மேல் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ டிரைவரான இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகள் ஷோபானவை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 4ஆவது முறையாக கர்ப்பமாக இருந்தார் ஷோபனா.. இந்த சூழலில் மணிகண்டன் தொடர்ந்து வரதட்சணை கேட்டது மட்டுமின்றி, ஒரே பெண் குழந்தைகளாக பெற்றுக்கொடுக்கிறாய் என்று சொல்லி துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 8) இரவு மணிகண்டன் ஆத்திரத்தில் ஷோபனாவை கடுமையாக தாக்கியதில் அவர் மயங்கிவிழுந்தார். அதன்பின் அருகிலிருந்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஷோபனாவை தன்னுடைய ஆட்டோவில் வைத்தே மணிகண்டன் கொண்டு சென்றார். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் சம்பவம் குறித்து தகவலறிந்த ஷோபனாவின் உறவினர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மேல் பள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு மரணத்திற்கு காரணமான கணவர் மணிகண்டன் மற்றும் அவரது தாய், தந்தையை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனிடையே மணிகண்டனை செங்கம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணைக்காக 8 மாத கர்ப்பிணி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.