துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்திற்கு மெட்ரோ ரயில் மூலம் பிரான்ஸ் நாட்டின் மந்திரியான பிராங்க் ரீஸ்டர் வந்துள்ளார்.
துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் போன்றவற்றின் சார்பாக எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகம் வரையிலும் மெட்ரோ ரயிலின் சேவையானது விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி “ரூட் 2020” என்ற புதிய வழித்தடத்தில் துபாய் ஜெபல் அலி பகுதியில் இருந்து கண்காட்சி வளாகம் வரை மெட்ரோ ரயில்கள் தினமும் இயங்கி வருகிறது. இந்நிலையில் உலக கண்காட்சி தொடங்கியதை முன்னிட்டு பொதுமக்கள், பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என அனைவரும் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் தங்களுடைய சொந்த வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இவர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அந்த கண்காட்சி வளாகத்திற்கு பிரான்சின் வர்த்தக மற்றும் பொருளாதாரத்துறை மந்திரியான பிராங்க் ரீஸ்டர் அந்நாட்டின் தொழிலதிபர்கள், வர்த்தகர்களுடன் மெட்ரோ ரயிலில் வந்துள்ளார். அப்போது ஜெபல் அலி மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரான்ஸ் நாட்டின் மந்திரியான பிராங்க் ரீஸ்டர் உடன் அந்நாட்டின் பிரபல கியோலிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பெர்னார்டு டாபரி உள்ளிட்ட பெரும்பாலானோர் வருகை புரிந்தனர். இதனையடுத்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்கான நோல் கார்டை பெற்றுக்கொண்ட அவர் பயணிகள் நுழையும் பகுதியில் அதை பஞ்ச் செய்து அந்த நிலையத்தின் பிளாட்பார்முக்கு வந்தார். அதன்பின் அங்கு அந்த கண்காட்சிக்கு செல்லும் மெட்ரோ ரயிலில் மந்திரி பிராங்க் ரீஸ்டர் ஏறினார்.
இதற்கு முன்னால் உள்ள ரயில் பெட்டியில் ஏறி துபாய் நகரை பார்த்தபடி அவர் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து கண்காட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கிச் சென்ற பிராங்க் ரீஸ்டர் கூறியதாவது “உலக அளவில் நடைபெறும் இந்த மாபெரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய் மெட்ரோ ரயில் மூலம் பயணம் செய்து வந்தோம். அதன்பின் 20 நிமிடங்களுக்குள் கண்காட்சி வளாகத்தை சேர்ந்து விட்டோம். எனவே மிக விரைவாகவும், எளிதாகவும் கண்காட்சியை அடைய இந்த போக்குவரத்து பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் சீரான போக்குவரத்து, பயணிகளுக்கு பாதுகாப்பான பயணம் போன்றவைகளை சாலை மற்றும் அதன் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த ஆணையத்தின் சேவைக்கு பாராட்டுக்கள்” என்று அவர் கூறினார்.