விபத்தில் காலை இழந்த நபருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் சவுரியார் பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகின்றார். கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை நால் ரோடு அருகே ஜெகநாதன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று ஜெகநாதன் மீது மோதியது. இதனால் ஜெகநாதன் தன் வலது காலை இழந்தார். இதனையடுத்து கோவை மண்டல அரசு போக்குவரத்து கழகம் மீது நஷ்ட ஈடு கேட்டு ஜெகநாதன் பெருந்துறை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் அரசு போக்குவரத்து கழகம் பாதிக்கப்பட்ட ஜெகநாதனுக்கு 18 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று 2016-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தார்.
இதனை எதிர்த்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டை விசாரித்த ஐகோர்ட்டு பெருந்துறை சார்பு நீதிமன்றம் விதித்த இழப்பீட்டு தொகையான 18 லட்சம் ரூபாயை, 28 லட்சமாக அதிகரித்து ஜெகநாதனுக்கு தர வேண்டும் என்று 2018-ல் தீர்ப்பளித்தது. அதன்பின் முதல் தவணையாக 10 லட்சம் ரூபாயை 2020-ஆம் ஆண்டு அரசு போக்குவரத்து கழகம் ஜெகநாதனுக்கு வழங்கியது. ஆகவே மீதமுள்ள நஷ்ட ஈட்டுத்தொகை மற்றும் 2016- இல் இருந்து அதற்கான வட்டி ஆகிய அனைத்தையும் சேர்த்து 21 லட்சத்து 57 ஆயிரத்து 599 ரூபாயை ஜெகநாதனுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று பெருந்துறை சார்பு நீதிமன்றம் கடந்த 2020-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் இந்த உத்தரவானது நிறைவேற்றப்படவில்லை. இதனைத்தொடர்ந்து தன்னுடைய இழப்பீடு பணத்தினை அரசு போக்குவரத்து கழகத்திடமிருந்து பெற்றுத் தர வேண்டி ஜெகநாதன் மீண்டும் அந்த சார்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அதனை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதியான தமிழ்செல்வி இழப்பீடு வழங்கத் தவறிய அரசு போக்குவரத்து சொந்தமான ஒரு பேருந்தை உடனடியாக ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார். அவரது உத்தரவின்படி கோவை-நாமக்கல் பயணிகள் அரசு பேருந்தை கோர்ட்டு அமீனா ரவிச்சந்திரன் ஜப்தி செய்தார். அதன்பின் பேருந்து பெருந்துறை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ஜெகநாதனுக்காக பெருந்துறையை சேர்ந்த வக்கீல் அய்யப்பன் ஆஜராகியிருந்தார்.