பிரிட்டன் இளவரசி டயானாவின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ சிலையை ஹரி மற்றும் வில்லியம் இருவரும் இணைந்து திறந்து வைத்தனர்.
பிரிட்டன் இளவரசி டயானாவின் 60-வது பிறந்த நாளையொட்டி இளவரசர்களான அவருடைய இரு மகன்கள் வில்லியம் , ஹரி இருவரும் இணைந்து அவரின் உருவ சிலையை கென்சிங்டன் பகுதியில் உள்ள மாளிகை தோட்டத்தில் திறந்து வைத்தனர் . இந்நிலையில் இளவரசர் ஹரி திருமணத்திற்குப் பிறகு அவரது சகோதரர் வில்லியம்க்கும் , ஹரிக்கும் இடையே கருத்து மோதல் இருப்பதாகவும் , இதனால் இருவரிடையே பேச்சு வார்த்தை இல்லை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியது. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிலை திறப்பு விழாவிற்கு சகோதரர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் சிரித்து பேசிக்கொண்டு வந்தனர் . இதையடுத்து தோட்டத்தில் இருந்த தங்கள் தாயின் உருவ சிலையை திறந்து வைத்தனர். இதன்பின் இந்த சிலை திறப்பு குறித்து இருவரும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர் . அந்த அறிக்கையில், எங்கள் தாயின் அன்பு ,வலிமை மற்றும் நற்குணங்களை நாங்கள் எப்போதும் மறவாமல் நினைவில் வைத்திருக்கிறோம். அவர் எங்களுடன் இருந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
எங்கள் தாயின் உருவச்சிலை அவரது வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக காணப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் இந்த சிலையை உருவாக்கிய Ian Rank-Broadley , தோட்ட வடிவமைப்பாளர் Pip Morrison,மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள், நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இதில் இளவரசி டயானாவின் சிலையை உருவாக்கிய Ian Rank-Broadley கடந்த 1998ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்ட நாணயங்களில் ராணியின் உருவத்தை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் இளவரசர் பிலிப் இறுதி சடங்கில் சந்தித்துக்கொண்ட ஹரி மற்றும் வில்லியம்சன் இருவரும் இந்த சிலை திறப்பு நிகழ்வில் மீண்டும் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்ததை பார்க்கும்போது மகிழ்ச்சி அளிப்பதாக பிரிட்டன் மக்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.