வயதான தாய் மற்றும் மாற்றுத் திறனாளியான மகளின் அவலத்தை புரிந்து கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வலங்கொண்டான்விடுதி பகுதியில் வசித்து வருபவர் காளியம்மாள். இவருடைய மகளான பாக்கியம் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஊர்ந்து கொண்டே செல்வார். இந்நிலையில் காளியம்மாளின் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் தன் மகளை தினமும் இயற்கை உபாதை காரணங்களுக்காக இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு அருகிலுள்ள திறந்த வெளிக்கு செல்வது வழக்கமான ஒன்று. தற்போது காளியம்மாளின் வயது முதிர்வால் மாற்றுத்திறனாளியான பாக்கியத்தை தூக்கிச் செல்ல இயலவில்லை.
இதுகுறித்து காளியம்மாள் கூறும்போது “என் மகள் பிறந்த ஒரு சில நாட்களிலேயே அவர் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளார். என் கணவர் உயிரோடு இருந்தவரை எங்களை நன்றாக பார்த்துக் கொண்டார். அவர் இறந்த பிறகு நாங்கள் மிகவும் வறுமையில் உள்ளோம். நான் கூலி வேலைக்கு சென்று தான் என் மகளை காப்பாற்றி வருகிறேன். தற்போது எந்த வேலையும் இல்லாத காரணத்தால் எங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் எங்கள் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தினால் எனது மகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். அவரை பார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தம் உண்டாகிறது.” என்று கூறியுள்ளார்.
இதனை அறிந்த புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி காளியம்மன் வீட்டிற்கு அதிகாரிகளை அனுப்பி அவர்களுக்கு வேண்டியவற்றை செய்வதற்காக உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் முதல்கட்டமாக மாற்றுத்திறனாளியான பாக்கியத்துக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் காளியம்மாளின் வீட்டில் கழிப்பறை வசதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனுடன் காளியம்மாள் மற்றும் பாக்கியத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சமூக ஆர்வலர்களும் தன்னார்வலர்களும் பலர் காளியம்மாளின் வீட்டிற்கு தேடிவந்து உதவி புரிகின்றனர்.