அதிமுக கட்சியில் நாளுக்கு நாள் உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதாவது தேர்தல் ஆணையத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் வரவு, செலவு கணக்குகளை அனுப்பி வைக்க அந்த வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொடர்பான தகவலை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ததோடு, எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு 2021-22 ஆம் நிதியாண்டு ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன் பிறகு வருமான வரி கணக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரில் செலுத்தப்பட்டு அதற்கான நகலும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிவரும் நிலையில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு இருப்பது கவனம் பெற்றுள்ளது. மேலும் இன்று ஓபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.