அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நெருங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர். இதற்காக டெல்லியில் இருந்து தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா , சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குனர்கள் திலீப் சர்மா , திரேந்திர ஓஜா ஆகியோர் நேற்று சென்னை வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் தனியார் ஓட்டலில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். அப்போது தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்தும் , தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்களுடன் ஆலோசனை நடைபெறுகின்றது.
இதையடுத்து நாளை காவல்துறை உயரதிகாரிகள் , டிஜிபிக்கள் , காவல் கண்காணிப்பாளர் _களுடன் ஆலோசனை நடத்தும் தேர்தல் ஆணையர்கள் அதன்பின் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் மற்றும் வருமான வரித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர். மேலும் தலைமை தேர்தல் அதிகாரி அரோராவின் பயணத்தில் வேலூரில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .