அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று ஆலோசனை கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா , சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குனர்கள் திலீப் சர்மா , திரேந்திர ஓஜா ஆகியோர் அரசியல் அக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 10 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். தேர்தல் ஆணையர்கள் அரசியல் கட்சியினருடன் தனித்தனியே ஆலோசனை நடத்துகின்றனர்.இந்த ஆலோசனையில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் , பாபு முருகவேல் , JDC பிரபாகர் பங்கேற்றுள்ளனர். அதே போல திமுக சார்பில் ஆர் எஸ் பாரதி , இளங்கோ ஆகியோரும் , தேமுதிக சார்பில் சந்திரன் , பாஜக சார்பில் திருமலைசாமி , காங்கிரஸ் சார்பில் தாமோதரன் , கராத்தே தியாகராஜன் கலந்துகொண்டுள்ளனர். அதே போல திரிணாமூல் காங்கிரஸ் , இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.