கொரோனா பரவல் காரணமாக தேர்தல் முடிவுக்கு பின் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. மேலும் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து கொண்டே வருகின்றது. இதனால் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,76,36,307 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,23,144 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் நேற்று மட்டும் 2771 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,97,894 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் மே 2ஆம் தேதி முதல் வெளியாக உள்ளது. மேலும் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தேர்தல் முடிவுக்கு பின் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டிருந்தது.