Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானில் மின்சார கட்டணம் அதிகரிப்பு!”.. பிரதமர் இம்ரான்கான் விளக்கம்..!!

பாகிஸ்தானில் பணவீக்கம் ஏற்பட்டு பெட்ரோல் மற்றும் சர்க்கரையை தொடர்ந்து மின்சார கட்டணமும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டில் பணவீக்கம் மற்றும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தற்போது பொருளாதார நெருக்கடியும் ஏற்படவுள்ளது. நாட்டில் சமீபத்தில் பெட்ரோலின் விலை அதிகரிக்கப்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 145.82 ஆக உயர்த்தப்பட்டு நேற்று நடைமுறைக்கு வந்தது.

பெட்ரோல் விலையை அதிகரிப்பதற்கு முன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருந்ததாவது, “பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது என்று நீங்கள் கூறினால், அதிலும் பாகிஸ்தான் நாட்டில் தான் விலை குறைவாக இருக்கிறது என்று கூறுவேன். விலையை உயர்த்தவில்லை என்றால் கடன் சுமை அதிகரித்துவிடும்.

பாகிஸ்தான் மதிப்பில் இந்திய நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 250 ரூபாய்க்கும், வங்காளதேசத்தில் 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நம் நாட்டில் பொருளாதார நெருக்கடி வெகுவாக அதிகரித்திருக்கிறது. அடுத்த இரண்டு வருடங்களில் 51.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி வேண்டும்.

அப்படியிருந்தால் தான் கடனிலிருந்து மீள முடியும்” என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் அங்கு திடீரென்று மின்சாரத்தின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணையமானது, மின்சாரத்தை ஒரு யூனிட்டிற்கு ரூ.1.68 ஆக அதிகரித்திருக்கிறது. எனினும் மாதந்தோறும் 200 யூனிட் வரை மட்டுமே மின்சாரத்தை உபயோகிக்கும் மக்களுக்கு புதிய கட்டண உயர்வால் பாதிப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |