திடீரென மின் கம்பம் வெடித்து தீப்பற்றி எரியத் தொடங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள புன்னம்சத்திரம் சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மின் கம்பம் நடப்பட்டது. இந்த மின் கம்பத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதே போல் அருகில் உள்ள கடைகள், திருமணமண்டபம், வீடுகள், அலுவலகங்கள் போன்ற பல பகுதிகளுக்கும் இங்கிருந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த கம்பத்தில் திடீரென வெடி சத்தம் கேட்டுள்ளது. பின்னர் அதிலிருந்து தீப்பொறி துளிர் விட்டு வேகமாக எரியத் தொடங்கியுள்ளது. இதனால் பீதி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரசாயன பவுடர் மூலம் தீயை அனைத்து உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.